தமிழ்நாடு

சாத்தான்குளம் அருகே தசரா விழாவுக்கு வந்த டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை

Update: 2022-10-07 04:42 GMT
  • ரேவந்த்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தசரா திருவிழாவையொட்டி விடுமுறையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
  • ரேவந்த்குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜ். இவரது மகன் ரேவந்த்குமார் (வயது27).

இவர் சென்னை கோயம்பேட்டில் தங்கியிருந்து, லோடு ஆட்டோ சொந்தமாக வைத்து ஓட்டி வந்தார்.

ரேவந்த்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தசரா திருவிழாவையொட்டி விடுமுறையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு பள்ளங்கிணறு-செட்டிக்குளம் சாலையில் உள்ள குடிநீர் தொட்டி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பள்ளங்கிணறு கிராமத்தில் 2 தசரா குழுக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த குழுக்களுக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் ஒரு குழு சார்பில் ரேவந்த்குமார் பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரேவந்த்குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய 3 பேர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News