தமிழ்நாடு

சென்னை வீதிகளில் அனுமதியின்றி தொங்கும் கேபிள் வயர்கள் அகற்றம்- மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Update: 2022-09-27 08:02 GMT
  • சென்னை மாநகர பகுதியில் 5400 கி.மீ. தூரத்திற்கு ஆப்டிகல் கேபிள் பதிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
  • மாநகராட்சி அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக கொண்டு செல்லப்படும் எவ்வித கேபிள்களாக இருந்தாலும் துண்டிக்கப்படும்.

சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் கேபிள் வயர்களை கொண்டு சென்று இண்டர்நெட், டி.வி. உள்ளிட்ட பல்வேறு இணைப்புகளை வழங்கி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இது மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு பொது மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற கேபிள் வயர்கள் தெருக்களில், வீட்டின் பகுதிகளில் தொங்கினால் அவற்றை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட பகுதியில் உள்ள மின்சார பிரிவு ஊழியர்கள் ஆபத்தான முறையில் தொங்கும் கேபிள் வயர்களை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் கேபிள் வயர் கொண்டு செல்ல கட்டாயம் அனுமதி பெற வேண்டும். அதற்கு கட்டணம் செலுத்தி அனுமதி பெற்ற பிறகே கேபிள் இணைப்புகளை வீடுகளுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் சிலர் சட்ட விரோதமாக கேபிள் வயர்களை கொண்டு செல்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சட்ட விரோத கேபிள் இணைப்பு, இண்டர்நெட் இணைப்பு உள்ளதை கண்டுபிடித்து அதனை துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி மாநகராட்சி மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் பாலமுரளி கூறுகையில், மாநகராட்சி அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக கொண்டு செல்லப்படும் எவ்வித கேபிள்களாக இருந்தாலும் துண்டிக்கப்படும். இந்த நடவடிக்கை சனிக்கிழமை தோறும் 1.5 மண்டல அளவில் நடைபெறும். ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை சட்ட விரோத கேபிள்கள் அகற்றும் நடவடிக்கை தொடரும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு வாரமும் ஒரு வார்டு தேர்வு செய்யப்பட்டு இந்த பணி நடைபெறும் என்றார்.

சென்னை மாநகராட்சி 35-வது வார்டு கவுன்சிலர் ஜீவன் கூறுகையில், அனுமதியில்லாமல் சிலர் கேபிள் இணைப்பை பல்வேறு பகுதிகளில் கொண்டு செல்வதாக கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில் பேசினார். இதனால் மாநகராட்சிக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சென்னை மாநகர பகுதியில் 5400 கி.மீ. தூரத்திற்கு ஆப்டிகல் கேபிள் பதிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை விட கூடுதலாக 4000 கி.மீ. தூரத்திற்கு சட்ட விரோதமாக கேபிள் பதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News