தமிழ்நாடு

சென்னையில் அனுமதிக்கு மாறாக கட்டிய 2.75 லட்சம் வீடுகளுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க மாநகராட்சி முடிவு

Update: 2022-09-29 08:01 GMT
  • மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்களுக்கு தேவையான 107 டாக்டர்களின் பணி ஒப்பந்த காலம் மேலும் 11 மாதம் நீட்டிக்க அனுமதி அளிக்கப்படும்.
  • நுங்கம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாநில பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் பிரியா நன்றி தெரிவித்தார்.

அதை தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து வரி மறு சீராய்வு செய்யப்பட்டது. 12.5 லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர். அதில் 6.90 லட்சம் பேர் முதல் அரையாண்டு சொத்துவரி முழுமையாக செலுத்தி உள்ளனர். மீதம் உள்ள 6.25 லட்சம் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டில் 2-ம் அரையாண்டு துவங்க குறுகிய காலமே உள்ளதால் முதல் அரையாண்டு வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி சீராய்வு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை நாளை (30-ந்தேதி)க்குள் செலுத்த வேண்டி உள்ளதாலும் உரிமையாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கிடும் வகையில் அபராதமாக விதிக்கப்பட்ட 2 சதவீதம் தனிவட்டி தளர்வு செய்வது அவசியமாக கருதப்படுகிறது. அதன்படி முதல் அரையாண்டு சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 2 சதவீதம் தனி வட்டியை தளர்வு செய்ய அனுமதிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள் டிரோன்மூலம் ஆய்வு செய்யும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் அனைத்து சொத்துக்களும் கணக்கெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 139 மதிப்பிட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 30,897 மாறுபாடுள்ள கட்டிடங்கள் வருவாய் துறை மூலம் அளவீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டது. மீதமுள்ள2,79,240 மாறுபாடுள்ள கட்டிங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியது.

தற்போதைய சூழலில் மாநகராட்சி வரி மதிப்பீட்டாளர்கள் மூலம் இந்த பணிகளை மேற்கொண்டால் காலதாமதம் ஆகும். எனவே தனியார் நிறுவனங்கள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து பணியை மேற்கொள்ள ரூ.5.94 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களை கொண்டு இந்த பணியை மேற்கொள்ளும்போது மாநகராட்சிக்கு தோராயமாக ரூ.95.95 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடையாறு-காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பூங்காவுக்கு கலைஞர் கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்ட வேண்டும்.

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்களுக்கு தேவையான 107 டாக்டர்களின் பணி ஒப்பந்த காலம் மேலும் 11 மாதம் நீட்டிக்க அனுமதி அளிக்கப்படும்.

நுங்கம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாநில பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News