தமிழ்நாடு

இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2022-08-15 08:52 GMT   |   Update On 2022-08-15 08:52 GMT
  • கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

சென்னை:

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மாபெரும் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றும்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்-தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்.

* 1600-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் 'ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755-ம் ஆண்டு சொன்னவன் நெல்கட்டாஞ்செவல் பூலித்தேவன்.

* மண்டியிடாத மானப் போர் புரிந்த மாவீரன் கான்சாகிப் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764.

* 'தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தரமாட்டேன்' என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799.

* கட்டபொம்மனின் மொத்தப் படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவனது மாமன் மகள் வடிவு, தற்கொலைப் படைத்தாக்குதலை நடத்தியவள்.

* பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார்.

* தனது உடையில் நெருப்பை வைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவள் குயிலி.

* சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அந்த மாவீரன் தூக்கு மேடைக்கு சென்ற ஆண்டு 1805!

அவரது போர்ப்படையிலும் ஒற்றர்படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நான் சொன்னவை அனைத்தும் 1857-ம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை.

1857 சிப்பாய் புரட்சியைத் தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவைதான் இவை.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News