தமிழ்நாடு

நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-06-28 07:16 GMT   |   Update On 2022-06-28 07:16 GMT
  • நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
  • நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமைச் செயலகத்தில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டிட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் வ.ரெ.போ. கிருஷ்ண மூர்த்தியிடம் வழங்கினார்.

இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரால் 10.12.2021 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, கட்டிடப் பணிகளுக்காக மேலும் ரூ.50 லட்சத்துக்கான காசோலை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

அவ்வகையில், நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டிட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News