தமிழ்நாடு

அனைத்து தரப்பு மக்களின் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Update: 2022-08-15 07:45 GMT
  • அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.
  • ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

சென்னை:

சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

* பாரதியின் இல்லம் அரசு இல்லமானது!

* பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்!

* தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்!

* வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி!

* வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது!

* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்!

* விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்!

* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

-இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றுகின்ற இயக்கம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்!

கடந்த ஓராண்டுகாலத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'விடுதலை நாள் அருங்காட்சியகம்' ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதம் பொங்க, இவ்வரலாற்றுச் சிறப்புமிகு நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தகைய அண்ணல் காந்திக்கும் தமிழ் நாட்டுக்குமான தொடர்பு என்பது அன்பாலும், பாசத்தாலும் மட்டுமல்ல தமிழால் ஏற்பட்ட நட்பு.

முதன்முதலாக இந்தியா முழுக்க 1920-ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் வந்த காந்தி அவர்கள் தமிழ்நாட்டில் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். தனது வாழ்நாளில் 20 முறை தமிழகம் வந்தவர் அண்ணல் காந்தி. தமிழைக் கற்றுக் கொண்டார். தமிழில் கையெழுத்துப் போட்டார். இவை அனைத்துக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப் போகிறேன் என்பதை 1920-ம் ஆண்டு சென்னையில் வைத்துதான் காந்தி அவர்கள் இந்தியாவுக்கே அறிவித்தார்.

1946-ம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் பேசிய அண்ணல் காந்தி, அடுத்த ஆண்டு நாம் உண்மையான விடுதலை நாளைக் கொண்டாடி விடுவோம் என்பதையும் இங்கிருந்துதான் இந்தியாவுக்கே அறிவித்தார். அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவான அரையாடை அணிவது என்பதையும் தமிழ்நாட்டில்-குறிப்பாக மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்.

பாரீஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக வந்த வரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்.

1921 செப்டம்பர் 22-ஆம் நாளன்று இந்த நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் அடையாளமாக சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம்.

எளிமை-இனிமை-நேர்மை-ஒழுக்கம்-மனித நேயம்-மதச்சார்பின்மை-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தி அடிகள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவை தான். இத்தகைய அனைத்து மனிதநேயக் கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சமூகநீதி-சமத்துவம்-சுயமரியாதை-மொழிப்பற்று-இன உரிமை-மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

* பெண்கள் அனைவர்க்கும் கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டுள்ளதன் மூலமாக பெண்களின் பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் தமிழ்நாட்டில் அதிகமாகி இருக்கிறது.

* ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாகத் தொடங்கப்பட்டுள்ள தன் மூலமாகத் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது. ஏற்றுமதி-இறக்குமதி அதிகமாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

* வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தந்தோம்.

* செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்டி இருக்கிறோம்.

* இதேபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் ஆடப்போகும் வீரர்களையும் வீராங்கனைகளையும் தமிழகத்தில் தயாரித்து வருகிறோம். அதற்காக ஒலிம்பிக் வேட்டை நடந்து வருகிறது.

* ஆலயங்களில் அன்னைத் தமிழ் மட்டுமல்ல, தகுதியுள்ளவர் அனைவரும் அர்ச்சகராகும் சமூகநீதி நிலைநாட்டப் பட்டுள்ளது. 2500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இந்த ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்.

* சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிக்கும் சென்று பெற்ற மனுக்களில் நடைமுறை சாத்தியமான மனுக்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்-முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக சாதாரண-சாமானிய மக்கள் அனைவரின் கோரிக்கையும் என்னை வந்தடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை உருவாக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நித்தமும் ஈடுபடுத்தி வருகிறேன்.

ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாத கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதுதான் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் நோக்கமாகும்.

இது அனைத்துத் தொகுதிக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டம்தான். ஆளும் கட்சி வென்ற தொகுதி-எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற வகையில் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதி தான். அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. உலக விளையாட்டுப் போட்டியை நடத்துவது முதல்-ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்பது வரை எங்கள் முன்னால் வரும் அனைத்துக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

இதற்குக் காரணம் நான் மக்களோடு மக்களாக வளர்ந்தவன். மக்களால் வளர்க்கப்பட்டவன். மிகச் சிறுவயதில் இருந்தே-பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டு என்னைப் பொது வாழ்க்கையில் ஒப்படைத்துக் கொண்டவன் நான். பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

இன்றைக்கும் சிறு பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ முதலில் தொடர்பு கொண்டு கேட்கும் அளவுக்குச் செயல்பட்டு வருகிறேன். இயற்கைப் பேரிடர் எங்கு நடந்தாலும் உடனடியாக நீண்டு காக்கும் கரம் என்னுடைய கரமாக இருக்கும். பதவியைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்போடு செயல்பட்டு வருகிறேன்.

இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கிப் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

Tags:    

Similar News