தமிழ்நாடு

சேத்துப்பட்டில் போலீஸ் போல நடித்து ரூ.29 லட்சம் வழிப்பறி

Published On 2022-09-30 06:08 GMT   |   Update On 2022-09-30 06:10 GMT
  • 4 பேரும் தங்களது மோட்டார்சைக்கிள்களில் ஏறி ரூ.29 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.
  • இருவரும் இது பற்றி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் ஆட்டோ மொபைல்ஸ் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் நசீர்கான். இவரது கடையில் சந்தோஷ்குமார், கமலக் கண்ணன் ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களிடம் கடை உரிமையாளரான நசீர்கான் ரூ.29 லட்சம் பணத்தை கொடுத்து சேத்துப்பட்டில் உள்ள தனது நண்பர் முகமது சேக்கிடம் கொடுத்து விட்டு வருமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு சந்தோஷ்குமார், கமலக்கண்ணன் இருவரும் ரூ. 29 லட்சம் பணத்தை பையில் எடுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்றனர். சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழி மறித்தது.

4 பேரும் போலீஸ்காரர்கள் போல மிரட்டும் தொனியில் பேசினார்கள்.ஏய்... என்னடா பையில் கஞ்சா கடத்துகிறீர்களா? என்று கேட்ட 4 பேரும் பையை வாங்கி பார்த்தனர். அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது.

இதையடுத்து 4 பேரில் இருவர் அந்த பையை பறித்தனர். மற்ற இருவரும் சந்தோஷ்குமார், கமலக் கண்ணன் ஆகியோரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறித்தனர்.

உங்கள் இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று கூறி விட்டு 4 பேரும் தங்களது மோட்டார்சைக்கிள்களில் ஏறி ரூ.29 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்களை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரும் அங்கிருந்து செல்லும் போது, கமலக்கண்ணன், சந்தோஷ்குமார் இருவரும் வந்த மோட்டார்சைக்கிளின் சாவியையும் பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இது பற்றி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.29 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவான 4 பேரையும் தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேராக்களை போட்டு பார்த்து கொள்ளையர்களை பிடிக்க வலை விரித்துள்ளனர்.

Similar News