தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார்

Published On 2022-08-09 07:02 GMT   |   Update On 2022-08-09 07:02 GMT
  • செஸ் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
  • கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னையை அடுத்த மாமல்லாபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜுலை 28-ந் தேதி மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தது.

இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர்.

12 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடை பெறுகிறது. இந்த விழாவில் சுமார் 1 மணி நேரம் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

இதற்காக கடந்த 10 நாட்களாக ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.

இந்த கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூடிய வீரர்கள்-வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வழங்குகிறார்.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார் கோவிச், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய்கபூர், இயக்குனர் பாரத்சிங் சவ்கான் மற்றும் செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இவர்களுடன் செஸ் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கமானது செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்கத்தின் உள்ளே செல்லும் நுழைவு வாயில்களில் தங்கநிற அலங்கார மாலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாலையின் நுனியிலும் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராஜா, ராணி, மந்திரி, யானை, குதிரை, சிப்பாய் உள்ளிட்ட காய்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் எந்த திசையில் பார்த்தாலும் செஸ் விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான அழைப்பிதழ் செஸ் காய்களில் ஒன்றான குதிரை வடிவில் அச்சிடப்பட்டுள்ளது.

இதனால் தொடக்க விழாவை போன்று நிறைவு விழாவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் எளிதாக பார்த்துக்கொள்ளும் வகையில், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மேடையை ஒட்டி இருபுறமும் 2 ராட்சத வடிவிலான எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மேடையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள கேலரிகளில் பெரிய அளவிலான தலா 3 எல்.இ.டி. அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தவிர்த்து, மேடையின் வலது புறம் மற்றும் இடது புறம் உள்ள கேலரியின் கீழ் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News