தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Published On 2022-10-05 08:00 GMT   |   Update On 2022-10-05 08:00 GMT
  • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
  • சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் மழை தூறல் இன்று இருந்தது.

சென்னை:

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் இருந்து மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. சூரியஒளி இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்தது.

பின்னர் லேசாக சிறு சிறு தூரலாக மழை பெய்து கொண்டே இருந்தது. காலை 10 மணி அளவில் வேகமாக பெய்யத்தொடங்கியது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் விஜயதசமி கொண்டாட்டம் மழையிலும் நடந்தது.

சிறு குழந்தைகளை இன்று மழைலையர் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் குடை பிடித்தவாறு குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் மட்டுமின்றி புறநகர் பகுதியிலும் மழை தூறல் இன்று இருந்தது. விஜயதசமிக்கான பூஜை பொருட்கள் வாங்கவும் மழையில் நனைந்த வாறு சென்றனர். இன்று அரசு விடுமுறை என்பதால் சாலைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. விடு முறையில் வீடுகளில் இருந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டனர்.

இதற்கிடையில் ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, கடலூர் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை 6 மற்றும் 7-ந்தேதி மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும்.

8, 9-ந்தேதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Similar News