தமிழ்நாடு

சென்னையில் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-12-06 09:40 GMT   |   Update On 2022-12-06 09:40 GMT
  • சென்னையில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.
  • காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது.

சென்னை:

சென்னையில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவகால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் தொடங்கிய அக்டோபர் மாதத்தில் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

மழை, பனி, குளிர் போன்றவற்றால் வைரஸ் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது.

சீசனுக்கு வரக்கூடிய இத்தகைய வைரஸ் மூலம் ஏற்படக்கூடிய காய்ச்சல் பொதுவாக 3 நாட்களில் சரியாகிவிடும். ஆனால் தற்போது ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை பாடாய் படுத்தி வருகிறது.

காய்ச்சல் குறைந்தாலும், சளி, தொண்டை வலி, உடல் வலி போன்றவை இருந்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தாலும் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்பின் அறிகுறியால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தால் பலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக இரவு 10 மணி வரை செயல்படக்கூடிய கிளினிக்குகள் இப்போது கூட்டம் குவிவதால் நள்ளிரவு வரை செயல்படுகிறது.

குளிர்ந்த காற்று, பனியின் காரணமாக வயதானவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இத்துடன் கண்நோய் பாதிப்பும் இந்த ஆண்டு அதிக அளவில் பரவி வருகிறது. டெங்கு, டைபாய்டு நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையும் உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை வைரஸ் காய்ச்சல் இந்த அளவிற்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தை சாமி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் மழை, பனி காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. சளி, தொண்டை வலி, இருமல் அதிகமாக இருக்கும். பொதுவாக வைரஸ் காய்ச்சல் 2, 3 நாட்களில் சரியாகிவிடும்.

ஆனால் இப்போது வருகின்ற புளூ, வைரஸ் காய்ச்சல் குணமாக 10 நாட்கள் வரை ஆகிறது. இதற்கு காரணம் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததே ஆகும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக மற்ற தடுப்பூசிகள் எதுவும் போடவில்லை. இதனால் குழந்தைகள், சிறுவர்களுக்கு தற்போது அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவின் போது கைகழுவும் பழக்கம், முக கவசம் அணியும் பழகத்தை பின்பற்றினோம். ஆனால் இப்போது அவற்றை விட்டு விட்டதால் பொதுவான நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது. 2 வருடமாக வராமல் இருந்த மற்ற நோய்கள் இப்போது தலைதூக்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் வைரஸ் காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெளியில் சென்று வந்தால் கை கழுவ வேண்டும்.

மருத்துவமனை, வணிக பகுதிகள், தியேட்டர்கள் போன்ற அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிந்தால் தொற்று பாதிக்காது.

மேலும் குழந்தைகளுக்கு 2 வருடமாக போடாமல் இருந்த தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை உடனே போட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் அந்த வயதுக்கான தடுப்பூசி போட வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி போடாததால் தான் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பாதிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News