தமிழ்நாடு
படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி

கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தம்

Update: 2022-06-26 04:13 GMT
  • கோடை சீசன் முடிந்த நிலையில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
  • நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கோடை சீசன் முடிந்த நிலையில் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் குணாகுகை, மோயர் பாய்ண்ட், பைன்பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் நேற்று காலை முதல் சாரல் மழையுடன் பலத்த காற்று வீசியது.

தொடர்ந்து குறையாமல் காற்று வீசியதால் ஏரியில் இருவகையான படகு சவாரிகள் நிறுத்தப்பட்டன. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வெகுநேரம் கழித்து துடுப்பு படகு சவாரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மிதி படகுகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இந்த சீதோசணத்தை அனுபவிக்க வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News