தமிழ்நாடு

வாழை மரங்களை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்.


பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: 10 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

Published On 2022-08-09 10:14 GMT   |   Update On 2022-08-09 10:14 GMT
  • விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
  • பயிர்களும் நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதன்காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பவானி ஆற்றில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 15 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது. பாதுகாப்பு கருதி நேற்று இரவு 7 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.

அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் சிறுமுகை, காந்தவயல், ஆலங்கொம்பு உள்ளிட்ட பவானி ஆற்றங்கரை பகுதியை சூழ்ந்தது. மேலும் விவசாய நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் தண்ணீரில் மூழ்கின.

இதேபோல மானாவாரி பயிர்களும் நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலத்தின் அருகே பவானி அம்மன் கோவில் உள்ளது. அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால் அந்த கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. அந்த சமயம் ஏராளமான ஆடுகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. அச்சம் அடைந்த அதன் உரிமையாளர்கள் ஆடுகளை பாதுகாப்பான இடத்துக்கு ஓட்டிச் சென்றனர்.

பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், யாரும் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அப்பகுதி மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே இன்று காலை பில்லூர் அணைக்கு நீர் வரத்து சற்று குறைந்ததை தொடர்ந்து நீர் திறப்பு 19 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

Similar News