தமிழ்நாடு

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க.வுக்கு அருகதையில்லை- அண்ணாமலை

Published On 2022-08-19 07:07 GMT   |   Update On 2022-08-19 07:07 GMT
  • தமிழக நிதி அமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும்.
  • இலவசங்களால் நாடு சீரழிந்துள்ளது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதில் பல கோடி ரூபாய் ஊழலும் நடந்துள்ளது.

திருச்சி:

புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் டெல்லிக்கு புறப்படும் முன்பாக பிரதமரிடம் குனிந்து கும்பிட செல்லவில்லை என்று வீர வசனம் பேசிவிட்டு சென்றார். ஆனால் பிரதமரை அவர் சந்தித்தபோது, இருக்கையின் நுனியில் பவ்யமாக அமர்ந்து பேசியது உலகத்துக்கே தெரியும். எனவே தி.மு.க. எப்போதுமே முன்னுக்குப்பின் முரணாக பேசி அரசியல் நடத்தும் கட்சியாகவே இருக்கிறது. கூத்து பட்டறையாக மாறிவிட்ட தி.மு.க.வில் யாரும், எதையும் பேசலாம் என்ற நிலை உள்ளது.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைப்பதற்கு குடும்ப ஆட்சி என்பது இருக்கக்கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும். இவை மூன்றுமே இல்லாததால் அதற்கு அருகதை இல்லை என்பதை முதல்-அமைச்சர் நன்கு உணர்ந்திருக்கிறார். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது.

தமிழக நிதி அமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும். இலவசங்களால் நாடு சீரழிந்துள்ளது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதில் பல கோடி ரூபாய் ஊழலும் நடந்துள்ளது. எனவே தி.மு.க.வில் உள்ள பொருளாதார நிபுணர்கள் இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே. கமிஷனால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம்.

முதல்வர் ஸ்டாலின் போதை ஒழிப்பில் அக்கறை உள்ளதுபோல் தினமும் பேட்டி அளிக்கிறார். ஆனால் கடந்த 14-ந்தேதி, வரலாற்றிலேயே அதிகபட்சமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. நிதிச்சுமையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதேநேரம் வாங்கிய கடனையும் முறையாக செலுத்தவில்லை. ஆட்சிக்கு வந்தபோது ரூ.1 லட்சம் கோடி கடன் பெற்ற நிலையில், தற்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் கேட்டுள்ளனர்.

எந்த அடிப்படையில் இது முன்னேறிக்கொண்டு இருக்கும் அரசு என்றும், திராவிட மாடல் அரசு என்றும் முதல்-அமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை. இலங்கையில் ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று, நிதி நிலைமை திவாலாகி, அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்திலும் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அரசை தாண்டி, தமிழக மக்கள் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருப்பதால் இது தெரியவில்லை. ராகுல்காந்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேஷம் போடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News