தமிழ்நாடு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை பணியில் சேர்க்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2022-09-27 09:03 GMT   |   Update On 2022-09-27 09:03 GMT
  • கல்வி மட்டுமல்ல கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத் தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள்.
  • ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல, இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பள்ளிகள் கோவில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தர வேண்டியது தான் ஆசிரியரின் பணி. அதைத் தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல, இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவியரும், ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர் என்பதிலிருந்தே உண்மை நிலை என்ன? என்பதை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும். தொடரக்கூடாது.

மாணவனை கண்டித்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மற்றும் இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அறநெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News