தமிழ்நாடு

கொலை திட்டத்துடன் லாட்ஜில் பதுங்கி இருந்த 6 பள்ளி மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது

Published On 2022-06-26 11:15 GMT   |   Update On 2022-06-26 11:15 GMT
  • கொலை திட்ட கும்பலுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிவாங்க அவர்கள் இந்த கொலை திட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சென்னை:

திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள லாட்ஜில் ரவுடிக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவின்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகவலன், உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் ஆகியோர் கொண்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது லாட்ஜில் 2 அறைகளில் சந்தேகத்திற் கிடமாக தங்கி இருந்த 14 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களது அறையில் சோதனை செய்த போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. கஞ்சாவும் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து 14 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரத்குமார், பரத்குமார், சாய்காந்த், டில்லிபாபு, சங்கர்ராஜா மற்றும் 9 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

இவர்களில் 6 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கைதான சாய்காந்த் கல்லூரி மாணவர். அவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இதேபோல டில்லிபாபு ஆந்திராவில் சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் ஆவார்.

முன்விரோதம் காரணமாக திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் லாட்ஜில் அறை எடுத்து பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் இன்று காலை கொலை திட்டம் வகுத்து இருந்ததாக தெரிகிறது.சரியான நேரத்தில் போலீசார் எடுத்த கைது நடவடிக்கையில் கொலை திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

பணம், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த கும்பலுடன் கூட்டாளிகளாக சேர்த்து உள்ளனர். அவர்கள் இதற்கு முன்பும் வேறு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட கும்பலுக்கும், கொலை செய்ய திட்டமிடப்பட்ட நபருக்கும் ஏற்பட்ட மோதல் என்ன? வேறு யாராவது கொலை செய்ய தூண்டினார்களா? அவர்களது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிவாங்க அவர்கள் இந்த கொலை திட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றியும் விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

கைதானவர்களிடம் இருந்து 2கத்திகள், அரிவாள், கடப்பாரை மற்றும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கொலை திட்ட கும்பலுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News