தமிழ்நாடு

மெட்ரோ ரெயில் ராட்சத இரும்பு கம்பிகள் மாநகர பஸ் மீது விழுந்தது- டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

Update: 2022-09-27 06:47 GMT
  • மெட்ரோ ரெயில் ராட்சத இரும்பு கம்பிகள் பஸ் மீது சரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போரூர்:

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிங்கேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக உயர்மட்ட பாதை, சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதேபோல் ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மவுண்ட்- பூந்தமல்லி சலையின் நடுவே ராட்சத தூண்கள் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 30அடி உயரத்துக்கு ராட்சத கம்பிகளால் தூண் கட்டப்பட்டு இருந்தது. இதனை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தி "கான்கீரிட்" போடும் பணி நேற்று இரவு நடைபெற்றது.

அதிகாலை 4 மணி அளவில் கண்டெய்னர் லாரியில் இருந்த ராட்சத இரும்பு கம்பிகளை கிரேன் மூலம் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி மாநகர பஸ் வந்தது. அதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 8 ஊழியர்கள் இருந்தனர். பஸ்சை டிரைவர் அய்யாத்துரை ஓட்டினார்.

மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடம் வந்த போது கிரேனில் இருந்த ராட்சத கம்பிகள் திடீரென சரிந்து மாநகர பஸ் மீது பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது.

இதில் பஸ்சின் மேல்பகுதி நொறுங்கியது.பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அய்யாதுரை (52), மற்றொரு டிரைவர் பூபாலன் (45) மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் ரப்ஜித்குமார் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்தவர்களும், அங்கு பணியில் ஈடுபட்ட மெட்ரோ ரெயில் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்ததும் பாண்டி பஜார் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மெட்ரோ ரெயில் ராட்சத இரும்பு கம்பிகள் பஸ் மீது சரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் சென்ற மாநகர பஸ் அதிக அளவில் அவ்வழியே செல்லவில்லை. இதனால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News