தமிழ்நாடு

சென்னையில் 1737 சேதமடைந்த சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படுகின்றன- மாநகராட்சி

Published On 2022-08-10 07:46 GMT   |   Update On 2022-08-10 07:46 GMT
  • சாலைகளை தோண்டி எடுத்து மீண்டும் புதிய சாலை போடும் பணியும் நடந்து வருகின்றன.
  • மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 1737 சாலைகள் சேதம் அடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்பு வாசிகள் இதனால் சிரமப்படுகின்றனர். உடனே இதை சீரமைக்க மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்து வருகின்ற 2 மாதங்களில் மழைக்காலம் தொடங்குவதால் மேலும் மோசமான நிலை ஏற்படுவதை தவிர்க்க சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.

சேதமடைந்த 1000 சாலைகளை சீரமைக்க இந்த மாதத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பல இடங்களில் போடப்படும் சாலைகளை தோண்டி எடுத்து மீண்டும் புதிய சாலை போடும் பணியும் நடந்து வருகின்றன. மாநகராட்சி குடிநீர் வழங்கல் மற்றும் மின்சார வாரியத்தின் பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு சாலை போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 1737 சாலைகள் சேதம் அடைந்து இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. என்ஜினீயர்கள் இதுவரையில் 1371 சாலைகளை ஆய்வு செய்து உள்ளார்கள்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தான் அதிக அளவு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு 251 சாலைகளும், ஆலந்தூரில் 209 சாலைகளும், பெருங்குடியில் 186, அம்பத்தூர் 150, மாதவரம் 135, கோடம்பாக்கம் 129, அண்ணாநகர் 127, திரு.வி.க. நகர் 109, சோழிங்கநல்லூர் 97, தேனாம்பேட்டை 68, மணலி 68, அடையாறு 58, ராயபுரம் 56, திருவொற்றியூர் 51, வளசரவாக்கம் 43 சாலைகள் என மொத்தம் 257 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.169 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

405 சாலைகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கி விரைவில் தயாராகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News