தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்து என்ன முடிவு? சபாநாயகர் அப்பாவு பதில்

Published On 2022-08-17 10:33 GMT   |   Update On 2022-08-17 10:33 GMT
  • எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை என சபாநாயகர் தகவல்
  • இது அவசரம், பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை என கருத்து

சென்னை:

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகளை சட்டபேரவை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

16-வது சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைகள் குறிப்புகளை சட்டப்பேரவை இணையதளமான www.assembly.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

2021-ம் ஆண்டு மே 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 26-ந்தேதி வரை இடைப்பட்ட காலத்தில் 14 நாட்கள் நடைபெற்ற சட்டசபையின் அவை குறிப்புகள் அனைத்தும் பி.டி.எப். வடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவ படத்திறப்பு விழா நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் பார்வைக்காக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை இன்று முறைப்படி தொடங்கி வைத்தேன்.

கேள்வி:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பிலும் கடிதம் வந்துள்ளதே. இதன் மீது என்ன முடிவு எடுப்பீர்கள்?

பதில்:- கடிதம் எனக்கு வரும் முன்பே நீங்கள் பத்திரிகைகளில் வெளியிட்டு விட்டீர்கள். எனவே இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. அது அவர்களது உள்கட்சி விவகாரம். அவர்கள் கோர்ட்டுக்கு சென்று உள்ளார்கள். நானே இதுபற்றி பலமுறை சொல்லி விட்டேன்.

ஜனநாயக முறைப்படி, சட்டமன்ற மாண்புப்படி முடிவு எடுப்பேன். ஏனென்றால் இது அவசரம், பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை. இது கட்சி பிரச்சினை. எனவே நல்ல முடிவு எடுப்பேன். சட்டமன்றத்துக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி விருப்பு-வெறுப்பு இன்றி நியாயமாக முடிவு எடுப்பேன்.

கேள்வி:- இந்த விஷயத்தில் கட்ட பஞ்சாயத்து செய்ய சபாநாயகர் யார்? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே?

பதில்:- அவர் (ஜெயக்குமார்) இதே சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவர்தான். அவர் மனசாட்சிபடி அவர்தான் பதில் கூற வேண்டும். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் சொன்னதை குற்றமாக நினைக்கவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க. இரு தரப்பினரும் கொடுத்த கடிதத்தின் மீது முடிவெடுக்க கால அவகாசம் எதுவும் உண்டா?

பதில்:- இந்த விஷயத்தில் யாருக்கும் எதையும் கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. சட்டமன்றத்தில் பல வாக்கெடுப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. அதற்கு எதுவும் கால அவகாசம் இல்லை. எனவே என்னிடம் மட்டும் இதற்கு கால அவகாசம் கேட்கிறீர்களே. அது பேரவை தலைவரின் உரிமை. ஆனாலும் எந்த கால தாமதமுமின்றி விருப்பு வெறுப்பு இன்றி நியாயமாக முடிவு எடுப்பேன் என்பதை நூறு சதவீதம் நம்பலாம்.

எனவே அதன் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி முடிவு எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News