தமிழ்நாடு

அரிசி கடத்தியவரை விரட்டி பிடிக்காத போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த எஸ்.பி.

Update: 2022-08-08 09:09 GMT
  • ரோந்து போலீசாரிடம் அரிசி கடத்தல் வாகனத்தை பிடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தெரிவித்தார்.
  • மோட்டார் சைக்கிளில் ரேசன் அரிசியை கடத்தி சென்றவர் மோட்டார் சைக்கிளுடன் மாயமானார்.

சேலம்:

கோவை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றார்.

சேலத்தை அடுத்த காகாபாளையம் பகுதியில் அவர் சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 மூட்டை ரேசன் அரிசியுடன் ஒருவர் சென்றார். இதனை கவனித்த போலீஸ் சூப்பிரண்டு மோட்டார் சைக்கிளை துரத்தினார். அதே நேரம் காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டலாம்பட்டி ரோந்து வாகன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, டிரைவர் சிவக்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பள்ளி அருகே உள்ள மண் சாலை வழியே மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றது. ரோந்து போலீசாரிடம் அரிசி கடத்தல் வாகனத்தை பிடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தெரிவித்தார். அவர்கள் தயக்கம் காட்டியதுடன், துரத்தி சென்றால் தாக்குவார்கள் என தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு , டிரைவர் சிவக்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் செய்வதறியாது திகைத்தார். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் ரேசன் அரிசியை கடத்தி சென்றவர் மோட்டார் சைக்கிளுடன் மாயமானார்.

இந்த சம்பவம் சேலம் மாநகர போலீஸ் வாட்ஸ்-அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சிவக்குமாரிடம் சேலம் மாநகர தெற்கு கமிஷனர் லாவண்யா விசாரித்தார்.

அப்போது அவர் எஸ்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருவதால் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் போலீஸ் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News