தமிழ்நாடு

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்படுகிறார்?: 5-ந் தேதி அறிவிக்க வாய்ப்பு

Published On 2022-08-18 09:44 GMT   |   Update On 2022-08-18 10:44 GMT
  • அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என்று கட்சியில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
  • ராகுல் பாத யாத்திரைக்கு முன்னதாகவே தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது

சென்னை:

அகில இந்திய காங்கிரசின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கட்சிக்கு அகில இந்திய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

தற்போது கட்சியில் உள்கட்சி தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை தொடங்குவதால் அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் தேர்தல் மற்றும் அகில இந்திய தலைவர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

இதற்கிடையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என்று கட்சியில் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் அதற்கு அவர் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

தற்போது இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பாத யாத்திரை செல்ல இருப்பதால் அந்த யாத்திரையை அவர் காங்கிரஸ் தலைவராக இருந்து நடத்த வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாக அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கவும், பாத யாத்திரை நிறைவடைந்த பிறகு முறைப்படியாக தேர்வு செய்யவும் டெல்லி மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் பாத யாத்திரை செல்வது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. இதற்கு முன்பு காந்தி, நேரு போன்ற மிகப்பெரும் தலைவர்கள் தான் இந்த மாதிரி யாத்திரைகள் மேற்கொண்டு உள்ளனர்.

அந்த வகையில் இந்த நூற்றாண்டில் காங்கிரஸ் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் அகில இந்திய தலைவராகவே அந்த யாத்திரையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு டெல்லி மேலிடமும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ராகுல் பாத யாத்திரைக்கு முன்னதாகவே தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.

Tags:    

Similar News