தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- தமிழக அரசு விளக்கம்

Published On 2022-10-07 03:27 GMT   |   Update On 2022-10-07 03:27 GMT
  • மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பவுடர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
  • கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்காலத்தில், இயல்பான மழை அளவைவிட 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 1-10-2022 முதல் 5-10-2022 முடிய தமிழ்நாட்டில் 5.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள கூடுதல் தலைமைச்செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், மாநில நிவாரண ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் கடந்த 3-ந்தேதி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

இதுதவிர, வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கிவரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

* மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

* 94458 69848 'வாட்ஸ்-அப்' எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

* மாநிலத்தில் மீட்பு பணிகளுக்காக 90 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன.

* பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் பேரை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டு உள்ளன.

* மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 பொக்லைன் எந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் எந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 எந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன.

* வெள்ளத்தடுப்புக்கென போதுமான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

* மின்கம்பங்கள், மின்கடத்தி மற்றும் மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன.

* மீனவர்களுக்கு, சாட்டிலைட் மூலம் பேரிடர் குறித்த தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

* சென்னை பெருநகரத்தை பொறுத்தமட்டில், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வருகிற 15-ந்தேதிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இப்பணிகளின் முன்னேற்றத்தை அனைத்து மண்டல கண்காணிப்பாளர்களும் பிரத்யேகமாக அக்கறையுடன் கண்காணித்து வருகிறார்கள்.

* மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் மற்றும் பால் பவுடர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

* கிடங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

* அனைத்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும், போதுமான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன.

இந்த வகையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News