தமிழ்நாடு

சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்- 37 பயணிகள் உயிர் தப்பினர்

Update: 2022-06-29 04:07 GMT
  • பயணிகள் அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
  • சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பஸ்சில் பிடித்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் கோவைக்கு புறப்பட்டு சென்றது.

பஸ்சை திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியை சேர்ந்த சத்தியராஜ் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் டிரைவர்- கண்டக்டர் மற்றும் 37 பயணிகள் என மொத்தம் 39 பேர் இருந்தனர்.

இரவு 11 மணி அளவில் பஸ் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர்பாண்டியபுரம் சோதனை சாவடியை கடந்து சென்றபோது திடீரென பஸ்சின் என்ஜினில் இருந்து தீப்பொறி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

உடனடியாக பயணிகள் அனைவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.

அதற்குள் பயணிகள் அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

தகவலறிந்ததும் ஓட்டப்பிடாரம் சிப்காட், புதியம்புத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பஸ்சில் பிடித்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது. எனினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.

மின்கசிவு காரணமாக பஸ்சில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News