தமிழ்நாடு

தேனி அருகே ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போட்டி கூட்டம்

Published On 2022-07-02 08:27 GMT   |   Update On 2022-07-02 08:27 GMT
  • அ.தி.மு.க.வை ஒற்றுமையுடன் வழிநடத்தும் திறமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது.
  • தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கம்பம்:

தேனி மாவட்டத்தில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த நாளிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதனிடையே கம்பம் புதுப்பட்டியில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான ஜக்கையன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என தெரிவித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி ஒழிக எனவும், ஜக்கையன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். கூட்டத்திற்கு பின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில், அ.தி.மு.க.வை ஒற்றுமையுடன் வழிநடத்தும் திறமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது.

தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகளும் இதனையே விரும்புகின்றனர் என்றார்.

இதனைதொடர்ந்து தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்பம் தெற்கு, வடக்கு செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், உத்தமபாளையம், சின்னமனூர் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

ஒரே இடத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் அடுத்தடுத்து போட்டி கூட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News