தமிழ்நாடு

செட்டி சாவடி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.

சேலம் அருகே துப்பாக்கி தயாரித்த வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

Update: 2022-10-07 05:17 GMT
  • கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் 3 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • துப்பாக்கி தயாரிக்க அவர்களுக்கு உதிரி பாகங்கள் கொடுத்தது யார், அவர்களுக்கு மேலும் உதவி செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர்.

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய்பிரகாஷ் (வயது 24), எருமாபாளையத்தை சேர்ந்தவர் பி.சி.ஏ. பட்டதாரி நவீன்சக்ரவர்த்தி (25), அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் கபிலன் (25).

இவர்கள் 3 பேரும் ஓமலூர் அருகே சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது போலீசாரிடம் சிக்கினர். அப்போது அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டன.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தடை செய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படுவதாகவும் கூறினர். மேலும் சேலம் அருகே உள்ள செட்டி சாவடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்ததாகவும் கூறினர்.

இதையடுத்து கடந்த மே மாதம் ஓமலூர் போலீசாரால் 3 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். துப்பாக்கி தயாரித்த வழக்கு என்பதால் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்று விசாரணைக்காக ஆஜர்படுத்தும் போலீசார் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்து வருகிறார்கள். தற்போது அவர்கள் 3 பேரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ. ஏ. அதிகாரிகள் சேலம் செட்டிசாவடியில் உள்ள துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இது தொடர்பாக அந்த பகுதியினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சில பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் துப்பாக்கி தயாரிக்க அவர்களுக்கு உதிரி பாகங்கள் கொடுத்தது யார், அவர்களுக்கு மேலும் உதவி செய்தவர்கள் யார், எந்தெந்த இயக்கங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்தினர்.

மேலும் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடனும் விரைவில் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News