தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு புதிய சிக்கல்

Published On 2022-06-30 17:01 GMT   |   Update On 2022-06-30 17:01 GMT
  • ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு

சென்னை:

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை உரிய நடைமுறைய பின்பற்றாமல் நடத்தியதாக கூறி, அந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அடுத்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மனுவில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் பொருளாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை மாவட்ட முன்னாள் செயலாளர் என்றும் சூரியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், ஜூலை 4ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு உத்தரவு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News