தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-07-03 08:35 GMT
  • முதல் நாளான இன்று சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர்.
  • ஆனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது.

நெல்லை:

தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில்.

இங்கு ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனி தேரோட்ட திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கொடிப்பட்டம் மற்றும் புதிய கயிறு ஆகியவற்றை வைத்து கொடியேற்றம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அபிசேகம் செய்யப்பட்டு கொடிமரத்துக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலை, இரவில் சிறப்பு பூஜைகள், சுவாமி அம்பாள் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிசேக ஆராதனை நடக்கிறது.

10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8-ம் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா செல்கிறார். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் நகரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த 10 நாட்களிலும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் பக்தி இசை, சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று வாசுகி மனோகரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர்.

Tags:    

Similar News