தமிழ்நாடு

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு

Published On 2022-08-09 08:29 GMT   |   Update On 2022-08-09 08:29 GMT
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக ஒகேனக்கலில் 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 1 லட்சதது 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதானல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், கா விரி கரைக்கு செல்லவும் 30-வது நாளாக தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி கரையோர பகுதிகளான முதலை பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் மற்றும் பிரதான அருவி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.05 அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

ஏற்கனவே வெள்ளம் சற்று குறைந்த நிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோர மக்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர். தற்போது மறுபடியும் வெள்ளம் அதிகமானதால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரியில் புரண்டோடும் வெள்ள நீரில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் அருகில் சென்று செல்பி எடுக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு தறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒலி பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News