தமிழ்நாடு

மாதவரம்-கெல்லீஸ் இடையிலான மெட்ரோ ரெயில் பாதைக்கு சுரங்கம் தோண்டும் எந்திரம் வந்தது

Published On 2022-07-02 04:54 GMT   |   Update On 2022-07-02 04:54 GMT
  • சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் திட்ட பணியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
  • சீனாவில் இருந்து எந்திரம் வரவழைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் பயணிகள் போக்குவரத்து எளிதாக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து அதில் பயணித்தவர்களின் எண்ணிக்கையில் 12 கோடி பேர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் திட்ட பணியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அடுத்து சென்னையில் மெட்ரோ ரெயிலின் 2-ம் திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 3 வழித்தடங்களில் 2-ம் திட்டப் பணிகள் நடக்க உள்ளன. மாதவரம் முதல் சிப்காட் வரை ஒரு வழித் தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றொரு வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 3-வது வழி தடமும் அமையவுள்ளது.

இதில் மாதவரம் முதல் கெல்லீஸ் வழியாக சிப்காட் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதையில் 9 கி.மீ. தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதேபோன்று மற்ற வழித்தடங்களிலும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

செ ன்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்தபோது சீனாவில் இருந்து நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டது. எனவே மீண்டும் சீனாவில் இருந்து எந்திரம் வரவழைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2-ம் திட்ட பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் முதல் எந்திரம் சென்னைக்கு கப்பல் மூலம் வந்துள்ளது.

தற்போது அந்த எந்திரம் சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதை மாதவரத்துக்கு எடுத்து செல்ல உள்ளனர். அங்கு வைத்து அந்த எந்திரத்தின் பாகங்கள் பொருத்தப்படும். அந்த எந்திரத்தை தயார்படுத்த சுமார் 3 மாதம் ஆகும் என்று தெரிகிறது.

எனவே 2-ம் திட்டத்தின் முதல் வழித்தடத்தில் மாதவரம், கெல்லீஸ், சிப்காட் வரை சுரங்கம் தோண்டும் பணி அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேலும் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

மெட்ரோ ரெயில் 2-ம் திட்டப் பணிகள் ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் சென்னையில் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமையும். இது சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும்.

Tags:    

Similar News