தமிழ்நாடு

சென்னை கொசப்பேட்டையில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

கொசப்பேட்டையில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

Published On 2022-08-10 08:37 GMT   |   Update On 2022-08-10 08:37 GMT
  • கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
  • கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் சென்னை கொசப்பேட்டையில் மும்முரமாக நடந்து வருகிறது.

சென்னை:

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கொசப்பேட்டையில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் வீடுகளில் கிருஷ்ணர் சிலைகளை பூஜையில் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து மகிழ்வார்கள். இதையொட்டி கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு பணிகள் சென்னை கொசப்பேட்டையில் மும்முரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு வகையான விதவிதமான களிமண் கிருஷ்ணர்-ராதை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.100 முதல் ரூ.1000 வரையிலான விலையில் கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 1/2 அடி முதல் 2 அடி வரை களிமண்ணில் கிருஷ்ணர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் பலவித வர்ணம் தீட்டப்பட்டு விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து சிலை தயாரிப்பு தொழிலாளி கூறியதாவது:-

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கொசப்பேட்டையில் கண்கவர் வண்ணங்களில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் செய்யும் பணிகளில் 100 ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம். கிருஷ்ணர் சிலைகள் உற்பத்தி மற்றும் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.

இந்த ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம். எதிர்பார்த்த அளவில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை நடைபெறும் என நம்பிக்கை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிலைகள் தயாரிப்பு பணியில் 500 குடும்பங்கள் ஈடுபட்டிருந்தது.

சிலைகள் தயாரிப்பு மூலப்பொருள்களின் விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சியால் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக குறைந்து உள்ளது. சிலை தயாரிப்பு தொழிலில் நஷ்டம் காரணமாக தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News