தமிழ்நாடு

தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு- 2 மாவட்டங்களில் இன்று கனமழை

Published On 2022-08-11 11:56 GMT   |   Update On 2022-08-11 11:56 GMT
  • கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைல் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடலோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News