டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை- அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மணிகள் நனைந்து பாதிப்பு
- திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
- டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
தஞ்சையில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.40 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் 85 சதவீதம் அளவுக்கு அறுவடை முடிந்து விட்டது. மீதமுள்ள பயிர்கள் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் அமைந்துள்ளன.
இது தவிர ஈரப்பதம் காரணமாக சாலையில் காய வைக்கப்பட்டு இருந்த நெல்மணிகளும் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தார்பாய் போட்டு மூடி வைத்திருந்தாலும் மழை நீர் ஊடுருவி ஈரப்பதத்தை அதிகரித்து விட்டது.
தற்போது கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். ஈரப்பதம் தொடர்பாக அறிக்கை தயார் செய்துள்ளனர். ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.
எனவே உடனடியாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் குறுவை அறுவடை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
இதேபோல் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி இளம் நெற்பயிர்களும் தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்படையும் எனவும் தெரிவித்தனர்.