தமிழ்நாடு

தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

தேங்காய்பட்டணத்தில் போலீஸ் தடையை மீறி மீனவர்கள் போராட்டம்- ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு

Published On 2022-08-16 10:22 GMT   |   Update On 2022-08-16 10:22 GMT
  • மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
  • தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார்.

கிள்ளியூர்:

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர் பைபர் வள்ளத்தில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது வள்ளம் முகத்துவாரத்தில் கவிழ்ந்ததில் பரிதாபமாக பலியானார்.

துறைமுக முகத்துவாரத்தில் குவிந்துள்ள மண் குவியலை அப்புறப்படுத்தாதது தான் விபத்துக்கு காரணம் என்ற குற்றசாட்டுகளை முன் வைத்து தூத்துர், இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறைமுகத்தைச் சுற்றியுள்ள சிறு, சிறு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மணல் அள்ளும் எந்திரத்தை இறக்கியது. இந்த எந்திரம் மீனவர்களை ஏமாற்ற கண்துடைப்புக்காக இறக்கப்பட்டதாகவும், டிரஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி)முதல் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும், மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது

இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனால் தடையையும் மீறி இன்று காலையில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீன் விற்பனை சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், மீன் வணிகர்கள் சங்கம், ஐஸ் வியாபாரிகள் சங்கம், டீசல் வியாபாரிகள் சங்கம் போன்றவை இணைந்து மீன்பிடி துறைமுகத்தில் தொடர் ஆர்ப்பாட்ட போராட்டம் துவங்கினர்.

தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார். தேங்கா பட்டணம் துறைமுக வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திர ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில், பங்கு பணியாளர் ஜாண்பிரிட்டோ கலந்து கொண்டனர். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் உட்பட பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்த வர்கள் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News