தமிழ்நாடு

சென்னையில் மீனவர்கள் போராட்டம்

Update: 2022-10-07 07:16 GMT
  • தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று காலை முதலே ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் குவிந்தனர்.
  • சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சென்னை:

தமிழகத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன் பிடித்து வந்தனர்.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் மீன் குஞ்சுகளின் உற்பத்தி பெருக்கமும், மீன் வளமும் பாதிக்கப்படுவதாக கூறி கடலில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து அவர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க மீனவர்களை அனுமதிக்க கோரி கடல் சார் மக்கள் நல சங்கமம் அமைப்பு சார்பில் சென்னையில் இன்று ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று காலை முதலே ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் குவிந்தனர்.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மேலும் மீனவ அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவு இயக்கங்களை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக கடல்சார் மக்கள் நல சங்கமம் பொதுச் செயலாளர் பிரவீண் குமார் கூறியதாவது:-

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வருமானம் இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லை. இதனால் மீன்பிடி தொழில் நலிந்து வருகிறது. எனவே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கான தடையை அரசு நீக்க வேண்டும்.

மேலும் மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் போராட்டம் காரணமாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் அந்த வழியாக முக்கிய வாகனங்கள் மட்டும் விடப்பட்டன.

மற்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News