தமிழ்நாடு

ஆம்பூர் ஷூ கம்பெனியில் பற்றி எரிந்த தீ.

ஆம்பூர் ஷூ கம்பெனி தீ விபத்தில் கோடி கணக்கிலான பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2022-09-27 05:19 GMT   |   Update On 2022-09-27 05:19 GMT
  • தனியார் ஷூ கம்பெனி தொழிற்சாலையில் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • தீயை அணைக்க இன்று காலை வரை கடுமையாக போராடி சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிக்கம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனி உள்ளது.

இந்த தொழிற்சாலையில் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலையில் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடினர்.

பற்றி எரிந்த தீ குடோன் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உமராபாத் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் 5 மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 17 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீயை அணைக்க இன்று காலை வரை கடுமையாக போராடி சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தால் ஷூ கம்பெனியில் இருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு ஷூ தயாரிக்கும் எந்திரங்கள் வெளிநாட்டு ரசாயன பொருட்கள் ஷூக்கு கீழ் வைக்கும் பாட்டம் போம் என்கின்ற கழிவு பொருட்கள் லேக்கர் டின்னர் என்கிற பொருட்கள் உட்பட கோடிக்கணக்கான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இந்த ஷூ கம்பெனியில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஷூ கம்பெனியில் தீ விபத்து நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் கசிவால் தீ பிடித்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News