தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

Published On 2022-07-02 07:30 GMT   |   Update On 2022-07-02 07:30 GMT
  • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
  • பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தனித்து செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எப்படியாவது அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிடப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சட்டவிதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக யாரையும் சந்திக்காமல் இருந்த அவர் தற்போது கட்சியினருடன் மீண்டும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று காலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். நேற்று இரவும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், விஜய பாஸ்கர், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலமான இன்பதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று தனது ஆதரவு வக்கீல்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளையும் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News