தமிழ்நாடு

(கோப்பு படம்)

சென்னையில் திரவுபதி முர்மு வரவேற்பு நிகழ்ச்சி: தனித்தனியாக வந்து ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ்-ஓபிஎஸ்

Update: 2022-07-02 12:30 GMT
  • திரவுபதி முர்முவுக்கு அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முழு ஆதரவு என எடப்பாடி பழனிசாமி உறுதி
  • எடப்பாடி பழனிசாமி செல்லும் வரை அறையில் காத்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் திரவுபதி முர்முவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

திராவிட மாடல், சமூகநீதி என பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பழங்குடியின பெண்ணை ஆதரிக்கவில்லை என்றும், மக்களை அவர் ஏமாற்றி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வமும் தங்களது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். எனினும் விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மேடைக்கு வராமல் அங்கிருந்த அறை ஒன்றில் காத்திருந்தார். 


பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த சென்ற பின்னர் மேடைக்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் திரவுபதி முர்முவை சந்தித்து  ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக சட்ட விதிகளின்படி தற்போது தாமே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News