தமிழ்நாடு

பேருந்து மோதியதில் சாலை வழிகாட்டி பலகை சாய்ந்தது- 5 பேர் படுகாயம்

Update: 2022-08-07 13:04 GMT
  • ராட்சத இரும்பு தூண் சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் போலீசில் சரண் அடைந்தனர்.

சென்னை:

சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே, வழிகாட்டி பலகை திடீரென சரிந்து விழுந்தது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து கத்திப்பாரா அருகே அதிவேகமாக வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை வழிகாட்டி பலகை தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. அத்துடன், வழிகாட்டி பலகையின் ராட்சத இரும்பு தூண் உடைந்து சாலையில் சரிந்தது.

சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது தூண் விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. வாகனங்களில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராட்சத இரும்பு தூண் விழுந்ததால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பின்னர் அந்த இரும்பு தூணை போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் போக்குவரத்து போலீசில் சரண் அடைந்தனர். 

Tags:    

Similar News