தமிழ்நாடு

அகஸ்தியா தியேட்டரின் தோற்றத்தை காணலாம்

வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்த அகஸ்தியா தியேட்டர் விடைபெற்றது

Update: 2022-12-01 09:43 GMT
  • 1967-ம் ஆண்டு கே.பாலசந்தரின் பாமா விஜயம் படத்தின் மூலம் தனது திரைபயணத்தை தொடங்கிய அகஸ்தியா தியேட்டர் வட சென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாகவே திகழ்ந்தது.
  • உலகம் சுற்றும் வாலிபன் ஓடியபோது எம்.ஜி.ஆர். அகஸ்தியா தியேட்டருக்கு வந்து சென்றுள்ளார்.

ராயபுரம்:

வடசென்னை பகுதியான தண்டையார்பேட்டையின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கிய அகஸ்தியா தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

கடந்த 55 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்த தியேட்டர் இடிக்கப்படுவதை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் மல்க அதற்கு விடைகொடுத்து வருகிறார்கள்.

1967-ம் ஆண்டு கே.பாலசந்தரின் பாமா விஜயம் படத்தின் மூலம் தனது திரைபயணத்தை தொடங்கிய அகஸ்தியா தியேட்டர் வடசென்னை பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாகவே திகழ்ந்தது. தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களும், ரஜினி, கமல் நடித்த படங்களும் இங்கு அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளன.

உலகம் சுற்றும் வாலிபன் ஓடியபோது எம்.ஜி.ஆர். இந்த தியேட்டருக்கு வந்து சென்றுள்ளார்.

விஜய், அஜித் மற்றும் தற்போதைய இளம் நடிகர்களின் படங்களும் அகஸ்தியா தியேட்டரில் வெளியாகி இப்போதைய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

70 எம்.எம். திரையுடன் டால்பின் சிஸ்டத்துடன் கூடிய தியேட்டர் என்பதால் அகஸ்தியா தியேட்டருக்கு சென்று மக்கள் படம் பார்ப்பதை அதிகம் விரும்பினார்கள். 85 காசு டிக்கெட்டில் தொடங்கி 1¼ ரூபாய், 5 ரூபாய் வகையிலும் டிக்கெட் கட்டணம் இருந்துள்ளது. தியேட்டர் திறக்கப்பட்ட ஆரம்பகால கட்டங்களில் மக்கள் சாப்பாடு கட்டிக்கொண்டு இங்கு வந்து சாப்பிடுவார்கள் என்று கூறுகிறார் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பூபாலன்.

இப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த அகஸ்தியா தியேட்டர் புதுப்பொலிவு பெறும் என்று நினைத்திருந்தோம். ஆனால் விடை பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

அகஸ்தியா தியேட்டரை இடிக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதலே இங்கு காட்சிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது தனது தோற்றத்தையும் அகஸ்தியா தியேட்டர் இழந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தண்டையார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் தியேட்டரை தூரத்தில் நின்று பார்த்து விடை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Tags:    

Similar News