தமிழ்நாடு
ஐ.ஐ.டி. ஆய்வாளர் வெங்கடரமண சீனிவாசன்.

திசையன்விளை அதிசய கிணற்றால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது- சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர் பேட்டி

Update: 2022-08-08 09:34 GMT
  • அதிகளவு தண்ணீர் சென்றால் சாதாரண கிணறு 2 மணி நேரத்தில் நிரம்பிவிடும். ஆனால்
  • நிலத்திற்கு மேலே உள்ளது போன்று திசையன்விளை பகுதியில் நிலத்தடிக்கு கீழேயும் நீரோடைகள் உள்ளது.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அயன்விளையில் ஒரு கிணறு உள்ளது.

அந்தப்பகுதியில் மழை, வெள்ளத்தால் அதிகளவு தண்ணீர் சென்றும் இந்தக் கிணறு நிரம்பாமல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிசயமாக பார்த்து சென்றனர்.

இந்த அதிசய கிணறு குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த சென்னை ஐ.ஐ.டி. சார்பில் 4 முறை திசையன்விளையில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ.ஐ.டி. புவியியல்துறை ஆய்வாளர் வெங்கடரமண சீனீவாசன் தலைமையில் இன்றும் அதிசய கிணற்றில் ஆய்வு நடைபெற்றது. இதில் சபாநாயர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் புவியியல்துறை ஆய்வாளர் வெங்கடரமண சீனீவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு விநாடிக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பல வாரங்களாக சென்றும் ஆயன்குளம் கிணறு நிரம்பவில்லை.

இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த ஐ.ஐ.டி. சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி சில முறை இங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.


 வழக்கமாக அதிகளவு தண்ணீர் சென்றால் சாதாரண கிணறு 2 மணி நேரத்தில் நிரம்பிவிடும். ஆனால் இங்கு அவ்வாறு நடக்கவில்லை.

இதற்கு காரணம் இப்பகுதியில் பூமிக்கு அடியில் சுண்ணாம்பு பாறைகள் உள்ளது. இந்த பாறைகள் மழைநீர் மற்றும் நிலத்தடி நீருடன் எதிர்வினையாற்றி வருகிறது. இதனால் பல இடங்களில் ஓட்டைகள், வாழ்வுகள் உருவாகிறது.

முதலில் சிறிய ஓட்டையாக தோன்றி பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பெரியதாக மாறுகிறது. நிலத்திற்கு மேலே உள்ளது போன்று திசையன்விளை பகுதியில் நிலத்தடிக்கு கீழேயும் நீரோடைகள் உள்ளது.

இது சுற்றுவட்டாரத்தில் 50 கிலோமீட்டருக்கு விரிந்து காணப்படுகிறது. இதனால் பூமிக்கு மேலே தண்ணீரை சேமித்து வைப்பது போன்று பூமிக்கு கீழேயும் சேமித்து வைக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆயன்குளம் அதிசய கிணற்றில் செல்லும் தண்ணீர் நீரோடைகள், சுண்ணாம்பு பாறைகளால் இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.

ஆயன்குளம் அதிசயகிணறு மூலம் இந்தப் பகுதியை சுற்றிய 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி தண்ணீர் உயர்ந்து காணப்படுகிறது. இந்த சுண்ணாம்பு பாறைகள் கடல்நீரை உள்வாங்காது என்பதால் இங்குள்ள நிலத்தடி நீரில் உப்பு சுவைகலக்காமல் நன்னீராக காணப்படும் தன்மை கொண்டவையாக உள்ளது.

ராதாபுரம் முதல் சாத்தான்குளம் வரை சுமார் 300 கிணற்றில் ஆய்வு செய்துள்ளோம். அதில் 150 கிணற்றின் நீர் சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீர் ஓட்டம், பம்ப் சோதனை, மண் பரிசோதனை செய்யப்பட்டு மண் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் பூமிக்கு அடியில் டிரோன் கேமிராவை செலுத்தினோம்.

அதன்மூலம் மேலும் எங்கு சுண்ணாம்பு பாறைகள் உள்ளது. எந்தமாதிரியான பாறைகள் உள்ளது? பூமிக்கு அடியில் பாதாள ஓடைகள் எப்படி உள்ளது? எந்த அளவில் தோன்றி உள்ளது என ஆய்வு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News