தமிழ்நாடு

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மோதலின்போது திருட்டுபோன 113 ஆவணங்கள் மீட்பு

Published On 2022-09-27 03:29 GMT   |   Update On 2022-09-27 03:29 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.
  • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லாமல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். பூட்டிக்கிடந்த அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் 47 பேர் காயம் அடைந்தனர்.

இந்த மோதலின்போது ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும், ராயப்பேட்டை போலீசாரால் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது.

வழக்கில் கைதாகாமல் இருக்க இருதரப்பைச் சேர்ந்த 67 பேர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இந்தநிலையில் மோதலின்போது கட்சி அலுவலகத்தில் திருட்டுபோனதாக புகார் கூறப்பட்ட 113 முக்கிய ஆவணங்களை மீட்டுவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News