தமிழ்நாடு
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதை காணலாம்

குமரி மாவட்டத்தில் தொடர் மழை- 500க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின

Update: 2022-05-22 11:38 GMT
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இருப்பினும் கொட்டி தீர்த்து வந்த மழை நேற்று சற்று குறைந்துள்ளது. நாகர்கோவில், புத்தன் அணை, அடையாமடை, ஆணைக்கிடங்கு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் நேற்றிரவு மழை பெய்தது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பாலமோர் பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 5.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 916 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.27 அடியாக உள்ளது. அணைக்கு 886 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது.அணைக்கு 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்1 அணை நீர்மட்டம் 11.71 அடியாகவும் சிற்றார்2 அணை நீர்மட்டம் 11.81அடியாகவும் பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 23.54 அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. வழக்கமாக கோடை காலங்களில் பாசன குளங்களில் குறைவான அளவே தண்ணீர் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 500க்கும் மேற்பட்ட குளங்கள் தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கன்னிபூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்களை தங்கு தடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

Similar News