தமிழ்நாடு
ஊட்டியில் குவிந்துள்ள சுற்றுலாபயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்த காட்சி

ஊட்டியில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலாபயணிகள்

Update: 2022-05-22 04:13 GMT
மலர் கண்காட்சி தொடங்கியதை அறிந்து, நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கண்காட்சி கடந்த 7ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சியும் நடந்தது.

கோடைவிழா தொடங்கியதில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியுள்ளது. அவர்கள் காய்கறி, ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சி தொடங்கியதை அறிந்து, நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.

மேலும் பூங்காவில் பூத்து குலுங்கிய பல வண்ண, வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளின் கண்களை குளிர்வித்தது. சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்கள் முன்பும், மலர்களின் முன்பு நின்றும் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்காவில் குவிந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர். நேற்று 18 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.

3வது நாளாக இன்று காலையும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலையாகவே தென்பட்டது. வரும் தினங்களில் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News