தமிழ்நாடு
மேட்டூர் அணை

நீர்மட்டம் 115.35 அடியாக உயர்வு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 46 ஆயிரத்து 353 கன அடி

Published On 2022-05-21 03:51 GMT   |   Update On 2022-05-21 03:51 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் 4-வ நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

ஒகேனக்கல்லில் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்கு மீன் வியாபாரம் களை கட்டியுள்ளது . காவிரியில் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீர் வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 29 ஆயிரத்து 964 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 47 ஆயிரத்து436 கன அடியாக அதிகரித்தது . மேட்டூர் அணைக்கு இன்று காலை 46 ஆயிரத்து 353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 112.77 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 115.35 அடியானது. இதனால் ஒரே நாளில் சுமார் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் 2 நாட்களில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் உபரி நீரும் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மேட்டூர் நீர் தேக்க பகுதிகளில் உள்ள பண்ணவாடி பரிசல் துறை கோட்டையூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஒலி பெருக்கி, தண்டோரா மூலமாக பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிககை விடுத்தனர்.

மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறும் காவிரியில் குளிக்கவோ, மீன் பிடிக்க செல்லவோ கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காவிரி கரையில் முகாமிட்டிருந்த மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு தங்களது முகாம்களை மாற்றினர்.

மேலும் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி கரையோர மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குசெல்லுமாறு மத்திய நீர் வளத்துறை ஆணையம் கோவை மண்டலம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேட்டூர் அணை வரலாற்றில் மே மாதங்களில் கடந்த 2011-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது . அதன்பிறகு நடப்பாண்டில் தான் மே மாதத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News