தமிழ்நாடு
கைது

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவி-இளம்பெண்ணை சீரழித்த வாலிபர்கள் கைது

Published On 2022-05-19 09:22 GMT   |   Update On 2022-05-19 09:22 GMT
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த 2 இளம்பெண்கள், இணையதளம் வாயிலாக பழகி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களை கொடுத்தனர்.
மதுரை:

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் மூலம் முகம் தெரியாத நபர்களுடன் பழகி காதல் வயப்பட்டு இளம்பெண்கள் பலர் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மேற்கண்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த 2 இளம்பெண்கள், இணையதளம் வாயிலாக பழகி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களை கொடுத்தனர்.

அதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் மாநகர் வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மதுரை புதூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் கவிபாலன் (23) பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.

அப்போது திருமணம் செய்வதாக கவிபாலன் ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இருவரின் காதல் விவகாரம் வெளியே தெரியவர கல்லூரி மாணவி உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிபாலனை வற்புறுத்தி உள்ளார். அப்போது அவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று கூறி தன்னை மறந்து விடுமாறு கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கவிபாலன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் கவிபாலனை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் அண்ணாநகரைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் மதுரையில் உள்ள பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேஸ்புக் மூலம் இவருக்கும், அல் அமீன் நகரைச் சேர்ந்த சீனி முகமது மகன் முகமது பைசல் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முகமது பைசல் கல்லூரி மாணவர் ஆவார். இருவரது பழக்கமும் நாளடைவில் காதலாக மாறியது. இதனை பயன்படுத்தி முகமது பைசல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியபோது, மதத்தை காரணமாக கூறி மறுத்து விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது பைசலை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்கள் மூலம் 2 பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News