தமிழ்நாடு
பேரறிவாளன்

அற்புதம்மாளின் அயராத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- பேரறிவாளன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

Published On 2022-05-18 09:01 GMT   |   Update On 2022-05-18 09:01 GMT
பேரறிவாளன் விடுதலையானதும் ஜோலார்பேட்டையில் உள்ள அற்புதம்மாளின் வீட்டில் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.
திருப்பத்தூர்:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அதிரடியாக விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்த விடுதலைக்கு பின்னால் ஒரு தாயின் பாசப்போராட்டம் நிரம்பி கிடக்கிறது.

1991ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அற்புதம்மாளின் பாசப் போராட்டமும், நீதிக்கான போராட்டமும் தொடங்கியது.

தனது மகன் பேரறிவாளன் நிரபராதி என்று கூறி வந்த அற்புதம்மாள் அதற்காக கடந்து வந்து பாதை கரடு முரடானவை. நரைத்த தலை... முதிர்ந்த தேகத்துடன் மகனின் விடுதலைக்காக அற்புதம்மாள் சந்திக்காத தலைவர்களே இல்லை. தனது மகனுக்காக குரல் கொடுக்கும் அத்தனை உள்ளங்களையும் ஆரத்தழுவி அவர்களோடு மகனின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருந்தார். இப்படி நேரம் காலம் பார்க்காமல் மனசு முழுக்க மகனின் நினைவுகளோடு அற்புதம்மாள் நடத்திய பாசப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பேரறிவாளனின் விடுதலை பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரையும் நேரில் சந்தித்து பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மனு அளித்திருந்தார். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து மகனின் விடுதலைக்காக நீண்ட நெடிய போராட்டத்தை உறுதியுடன் நடத்தி அதில் வெற்றி வாகையையும் அற்புதம்மாள் சூடி இருக்கிறார்.

இந்த உலகில் தாய்ப்பாசத்துக்கு நிகரானது எதுவும் இல்லை என்பார்கள். தாய்ப்பாசம் எப்போதும் தோற்றது இல்லை. இந்த பாசத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பதையும் அற்புதம்மாளின் பாசப்போராட்டம் உணர்த்தி உள்ளது.

பேரறிவாளன் விடுதலையானதும் ஜோலார்பேட்டையில் உள்ள அற்புதம்மாளின் வீட்டில் இன்றே கொண்டாட்டம் களை கட்டி இருந்தது.

ஜோலார்பேட்டையில் உள்ள அற்புதம்மாளின் வீட்டு முன்பு உறவினர்கள் குவிந்தனர்.

அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துக்கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பேரறிவாளனின் சகோதரிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர்.

30 ஆண்டு சிறை வாசம் முடிவுக்கு வந்ததால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தந்தை குயில்தாசன் தெரிவித்தார்.

பேரறிவாளன் விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் மனிதநேய மிக்க அனைவருக்கும் நன்றி. தனது மகனின் 31 ஆண்டு சிறைவாசம் நிறைவடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பேரறிவாளன் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அவர்களே ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். நீதி நியாயம் வென்றது என்று அவர்கள் முழக்கம் செய்தனர்.

அதை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த பேரறிவாளன் வீட்டு முன்பு அமைக்கப்பட்டிருந்த நீதியரசு கிருஷ்ணய்யர், பேரறிவாளன் தங்கை செங்கொடி உருவ படத்திற்கு மாலை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அறிவு (பேரறிவாளன்) விடுதலையானதும் அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அற்புதம்மாள் அடிக்கடி கூறுவார். அவரது ஆசை நிறைவேறி ஜோலார்பேட்டையில் உள்ள அற்புதம்மாளின் இல்லத்தில் விரைவில் டும்... டும்... சத்தம் கேட்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.


Tags:    

Similar News