தமிழ்நாடு
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரை காணலாம்

கோவில்பட்டி அருகே சலூன், டீ கடைகளில் ‘திடீர்’ தீ விபத்து

Published On 2022-05-18 08:15 GMT   |   Update On 2022-05-18 08:15 GMT
கோவில்பட்டி அருகே சலூன், டீ கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது சகோதரர் கோமதி.

இவர்கள் இருவரும் காவல் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் அடுத்தடுத்து சலூன் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் சலூன் கடைகளுக்கு அடுத்து அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த 3 கடைகளில் இருந்து அதிகமான புகைமூட்டத்துடன் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். எனினும் 3 கடைகளும் முற்றிலுமாக சேதமடைந்தது.

கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், கடையில் இருந்த டி.வி.க்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

கோமதிக்கு சொந்தமான கடையில் பணிபுரியும் கார்த்தி என்ற இளைஞர் கடையில் தூங்கி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியதும், அதிக வெப்பம் ஏற்பட்டு விழித்து பார்த்தால், அங்கிருந்து வெளியே ஓடிவந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News