தமிழ்நாடு
குற்றாலம் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

நெல்லையில் பரவலாக மழை- குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-05-18 07:16 GMT   |   Update On 2022-05-18 07:33 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகரின் சில இடங்களில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இதமான காற்று வீசி வருகிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதனை ஒட்டி அமைந்துள்ள கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, ஆய்க்குடி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதோடு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து காட்டு பகுதிகளில் மழை பெய்ததால் நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு குளித்து மகிழ்கின்றனர்.

அதே நேரம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மெயினருவியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் இன்று காலை மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு மற்றும் மிகப்பெரிய அணையான அடவிநயினார் ஆகிய அணைகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பாளை, வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகரின் சில இடங்களில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்தபடி சென்றனர். பணிக்கு புறப்பட்டு சென்ற பெண்களும் மழையில் நனைந்தபடி பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

Tags:    

Similar News