தமிழ்நாடு
தக்காளி

தக்காளி கிலோ ரூ.90 ஆக அதிகரிப்பு- மேலும் விலை உயர வாய்ப்பு

Published On 2022-05-18 06:32 GMT   |   Update On 2022-05-18 06:32 GMT
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இன்று அதன் வரத்து மேலும் குறைந்து 36 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளதால் விலை மேலும் அதிகரித்து உள்ளது.
போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார் ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.

தினசரி 75 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அதன் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை வீழ்ச்சி அடைந்த போதிலும் தினசரி விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த தக்காளியை மொத்த வியாபாரிகள் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

தென் மாவட்டங்களில் பெய்த திடீர் கோடை மழையால் அங்கு நடைபெற்ற தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை அதிகளவில் கொள்முதல் செய்ய தொடங்கினர். இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் “அசானி” புயல் மழை மற்றும் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக படிப்படியாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று 43 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. இன்று அதன் வரத்து மேலும் குறைந்து 36 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளதால் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

மொத்த விற்பனை கடைகளில் நேற்று ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.900-க்கு விற்கப்படுகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வரத்து குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதிரடியாக வரத்து அதிகரித்தால் மட்டுமே தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News