தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதச்சார்பின்மைக் கொடி நாடு முழுவதும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2022-05-17 18:25 GMT   |   Update On 2022-05-17 18:25 GMT
தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்ட கனவுகளை நிறைவேற்றி வருகிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

பட்டியலின,பழங்குடியின மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதிகளைத் தமிழ்நாடு அளவில் நிறைவேற்றி இருக்கக்கூடிய கட்சி திமுக என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 

சமூக நீதிக்காகவும், ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போராடியும் அதற்காகப் பல்வேறு தியாகங்களையும் செய்திருக்கக்கூடிய இயக்கம்தான் இந்த இயக்கம் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து முதன் முதலில் 18 விழுக்காடாக 
1971-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் அமைந்த ஆட்சிதான் நிறைவேற்றிக் கொடுத்தது. 

அதைத் தொடர்ந்து, 1989-ல் பழங்குடியினர் என தனியாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான். 2009-ல் அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடாக மூன்று விழுக்காடு வழங்கியதும் திமுக ஆட்சிதான். 

நாட்டிலேயே முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்ததும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான். 

அனைத்துச் சமுதாய மக்களும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒருமித்த கருத்தோடு, சாதிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சமத்துவபுரங்களை தந்தை பெரியார் பெயரில் உருவாக்கியதும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான்.



பட்டியலின, பழங்குடியின மக்களுடைய நலன் காக்க அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட தாட்கோ என்று அழைக்கப்படக்கூடிய ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், புதிரை வண்ணார் நல வாரியம்,
தூய்மைப் பணியாளர் நல வாரியம், பழங்குடியினர் நலவாரியம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததும் திமுக ஆட்சிதான்.

திரைப்பட இயக்குனர் ரஞ்சித் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும், திமுக-வினுடைய காலம் என்பது, அத்தகைய முற்போக்கு புரட்சிக் கருத்தியல் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று
தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் இப்படி ஏராளமானவர் திரைத்துறையில் பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை கையாண்டு இருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். 

இப்போது அவர்கள் வழியில் நானும் அந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியிருக்கக்கூடிய திமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கக்கூடிய என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கக்கூடிய ‘நெஞ்சுக்கு நீதி’ வருகிற 20ஆம் தேதி அந்தத் திரைப்படம் வெளிவர இருக்கிறது. 

நேற்று முன்தினம் அந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் படத்தை நான் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்தும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக வழங்கியிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தும் அந்தத் திரைப்படம் பேசியிருக்கிறது.

மதவாத ஆதிக்க சக்திகளை எதிர்க்க இந்தக் காலத்திலே நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய திரைப்படங்களைத் திரைத்துறையினர் எடுக்க வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக இந்தப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டம்தான் சமூக தீமைகளுக்கான தீர்வாக அமைந்திட முடியும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், படைப்பாளிகள் எனச் சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியல் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன். 

இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது எனது அரசல்ல, நமக்கான அரசு என்று நான் தொடர்ந்து அடிக்கடி எடுத்துச் சொல்வது உண்டு. அனைத்து மக்களுடைய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு நமதுஅரசு. 

ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய திமுக அரசு, பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளை காப்பாற்றக் கூடிய அரசு. சுருங்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது திராவிட மாடல் அரசு.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக, மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவைத் திருத்தி அமைத்தேன். ஒரே ஆண்டில் இரண்டு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம், பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அறிவித்திருக்கிறோம், நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த தமிழ்நாடு பட்டியலின பழங்குடி மாநில ஆணையத்தை உருவாக்கி, இன்றைக்கு அந்த மக்களுடைய சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறோம். 

டாக்டர் அம்பேத்கர் பெயரில் வழங்கப்படக்கூடிய தமிழக அரசின் விருதிற்கு இதுவரை இருந்த ஒரு லட்சம் ரூபாய், பரிசுத் தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

அதேபோல, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருக்கிற போதெல்லாம் அம்பேத்கருடைய கனவு செயல் வடிவத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறக்க முடியாது. அம்பேத்கருடைய கனவினை நிறைவேற்றி, நமது திராவிட மாடல்
அரசு தினமும் பல்வேறு நலத்திட்டங்களை உரிமைகளை, அந்த உரிமை களுக்குரிய திட்டங்களை, சாதனைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

நமது அரசியல் சட்டம் நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டது. ஒன்று இறையாண்மை, இரண்டாவது சமதர்மம், மூன்றாவது மதச்சார்பின்மை, நான்காவது மக்களாட்சி. இந்த நான்கும் இணைந்து பயணிக்கும் நாடுதான் நமது அரசியல் சட்டம் தந்துள்ள நமது மக்களாட்சி அரசு. அம்பேத்கர் கனவான இந்த மக்களாட்சிக் குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அனைவருடைய விருப்பமாக இருந்து கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டிலும், அனைத்து மாநிலங்களிலும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சமத்துவம் 100 விழுக்காடு உறுதி செய்யப்பட வேண்டும். மதச்சார்பின்மைக் கொடி நாடு முழுவதும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். அப்போது தான் நம் மக்களாட்சி தழைக்கும், நாடு முன்னேறும். 

நம் நாடு வளர, நம் மாநிலம் வளர வேண்டும். நம் மாநில வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தாக வேண்டும். நம் மாவட்டங்கள் வளர, ஒவ்வொரு கிராமமும் சமூக நீதிப் பூங்காவாக, சமத்துவப் பூங்காவாக மாற வேண்டும். அப்போதுதான் உலகத்தினுடைய நம்பர் ஒன் வல்லரசாக, அதற்கும் மேலாக ஒரு நல்லரசாக இந்தியா மாறும்.

தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்ற உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News