தமிழ்நாடு
கோவையில் மழை பெய்தபோது குடைபிடித்தபடி சென்ற சிறுமிகள்.

கோடையை குளிர்வித்தது- கோவையில் 39 சதவீதம் கூடுதல் மழை

Published On 2022-05-16 03:41 GMT   |   Update On 2022-05-16 03:41 GMT
கோடை மழை சீசன் நிறைவு பெறும் மே இறுதிக்குள் கோவைக்கு கூடுதலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த 2 தினங்களாக காலை முதல் இரவு வரை சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்தது. நேற்று நள்ளிரவில் மாநகர் பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.

இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் அக்னி நட்சத்திரம் காலத்திலும் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச் 1ந் தேதி முதல் நேற்று வரை கோவை மாவட்டத்தில் 167.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இந்த கால கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய சராசரி கோடை மழை, 120 மி.மீ.யை காட்டிலும் 39 சதவீதம் ஆகும்.

இன்று முதல் 18ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கோடை மழை சீசன் நிறைவு பெறும் மே இறுதிக்குள் கோவைக்கு கூடுதலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.



Tags:    

Similar News